சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கடல் நீரை குடிநீராக்கும் புதிய நிலையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தொலைநோக்கு பார்வையுடன் குடிநீர் திட்டங்களை கையாளும் தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், அதனை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறது. விவசாய கிணறுகள், கல் குவாரிகள், கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் என பல்வேறு வழிகளில் இருந்து மக்களுக்கு தண்ணீர் விநியோகித்து வருகிறது.
அதிலும், சென்னை மக்களின் குடிநீரை தேவையை பூர்த்தி செய்வதில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பெரும் பங்கு வகிக்கிறது.
2013-14-ம் ஆண்டுகளில் நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் அமைக்கப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அன்று முதல் சென்னைக்கு தினசரி 210 மில்லியன் லிட்டர் தண்ணீரை இந்த இரண்டு நிலையங்களும் வழங்கி சென்னை வாசிகளின் தாகத்தை தீர்த்து வருகின்றன.
சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் இந்த திட்டங்களை விரிவுபடுத்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணினார். அதன்படி, நெம்மேலியில் தினசரி 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறும் வகையில் மேலும் ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்தார். இதற்காக அறிவிப்பையும் சட்டப்பேரவையில் வெளியிட்டார். அவரது திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக நிறைவேற்றி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
1,689 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10.50 ஏக்கரில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் கட்டுமான பணிகள் முடிந்து, சென்னை மக்களின் தாகத்தை போக்கும்.
இதேபோல சட்டப்பேரவையில் அறிவித்த 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட போரூரில் கடல் நீர் குடிநீராக்கும் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கான பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த திட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட விரைவாக முடிக்க உத்தரவிட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்பதை அரசு ஆய்வு செய்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இனி புதிய தொழிற்சாலைகள் தொடங்கவும், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும், நீரை மறு சுத்திகரிப்பு செய்யும் வசதி இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தமிழக அரசு தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.