ஹரியானா மாநில அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு மருத்துவமனை உதவியாளர் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவின் ரோதக்கில் கையில் காயத்துடன் சென்ற நோயாளிக்கு அவசர சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவமனையின் உதவியாளர் கையில் தையல் போட்டுள்ளார். காக்கி சீருடையுடன் அவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்வை நோயாளியுடன் சென்ற அவரது நண்பர் தன்னுடைய மொபைல் போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த சம்பவம் தற்பொழுது வைரலாகியுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் நடைபெற்ற இரண்டாவது நிகழ்வு இது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரோதக் மாவட்டத்தின் சம்ப்லா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் விபத்தில் ஏற்பட்ட காயங்களுடன் வந்த நபருக்கு இதேபோல மருத்துவமனை உதவியாளர் சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி அனில் குமார் பிர்லா தெரிவித்துள்ளார்.