நாகை மாவட்டம், பூம்புகாரில் மீனவ குடும்பம் ஒன்றினை ஊர் பஞ்சாயத்து, ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கோட்டாசியரிடம் மனு அளித்துள்ளனர்.
நாகை மாவட்டம், பூம்புகாரை சேர்ந்த லெட்சுமணன் மற்றும் அவரது குடும்பத்தினர் கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருபவர்கள். பூம்புகாரில் உள்ள மீனவர்கள் நாகப்பட்டினத்தின் தெற்குப்பகுதியில் மீன் பிடித்தொழில் செய்யக்கூடாது என்பது ஊர் கட்டுப்பாடு. ஊர் கட்டுப்பாட்டை மீறி லெட்சுமணன் குடும்பத்தினர், அப்பகுதியில் மீன் பிடித்ததால் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தும், 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் ஊர் பஞ்சாயத்து அறிவித்துள்ளது. இதனால் கடந்த 7 மாதமாக எந்த தொழிலும் செய்ய வழியில்லாமல் இருப்பதாக கூறிய லெட்சுமணன் குடும்பத்தினர், இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் உறுதி அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.