குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால், வருமான வரி அபராதத்தை கைவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
48 லட்சம் ரூபாய் வருமான வரியை, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.
கடந்த 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த வழக்கு இன்று நீதிபதி டி.சிவஞானம் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான அபராத தொகை கொண்ட வழக்கை கைவிடுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் முடிவெடுத்துள்ளதன் அடிப்படையில் தனக்கு எதிரான வருமான வரித்துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது.
குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால், அந்த உத்தரவு இந்த வழக்கிற்கு பொருந்தாது என்று வருமான வரித்துறை தெரிவித்தது.
இந்த விளக்கத்திற்கு சசிகலா பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.