தமிழ்நாடு முழுவதும் அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன், பொதுமக்கள் அமைதியான முறையில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. பொதுமக்கள் அமைதியான முறையில் புத்தாண்டை கொண்டாடினர். அதே நேரத்தில் தேவாலயங்களில் நடத்தப்பட்ட சிறப்பு வழிபாடுகள் நிகழ்ச்சியிலும், ஏராளமானோர் பங்கேற்றனர். பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்தும், கேக்குகள் வழங்கியும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை, பரிமாறிக்கொண்டனர். புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள முக்கியமான மேம்பாலங்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதேபோல், மெரினா கடற்கரை சாலைகள் உள்ளிட்ட சில பகுதிகளும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகு மிளிர்ந்தன.
புதுவையில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், ஏராளமானோர் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும், கடற்கரையில் திரண்ட பொதுமக்கள், உற்சாகமாக கொண்டாடி புத்தாண்டை வரவேற்றனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து, தங்களது அன்பை பகிர்ந்து கொண்டனர். அதே நேரத்தில், புதுச்சேரி காவல்துறையினர், தொடர்ந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள தேவாலயத்தில், புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தங்களது குடும்பத்தினர், உறவினர்களுடன் வழிபாட்டில் பங்கேற்றனர்.
கோவையில் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள், கட்டுப்பாடுகள் காரணமாக அமைதியான முறையில் கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல், தேவாலயங்களில் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டனர்.
சேலத்தில், தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபாடுகள் நடைபெற்றன.