ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி, சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கடந்த 25 நாட்களாக சிறையில் இருக்கும் ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றத்தில் சில முறை தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணையின் போது, ப.சிதம்பரத்தை ஜாமீனில் விடுவித்தால் ஆதாரங்களை அழித்துவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.