ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் கைது செய்தனர். 27 மணி நேர தலைமறைவிற்கு பிறகு வீடு திரும்பிய சிதம்பரம் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமின் கோரி ப.சிதம்பரம் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், முன் ஜாமீன் அளிக்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து ப.சிதம்பரம் தலைமறைவானார். அவரை, கைது செய்ய முடியாததால் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். தேடப்படும் நபராக சிதம்பரம் அறிவிக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களில் காண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இதையடுத்து ப.சிதம்பரம் ஜாமின் மறுக்கப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவில் குறைகள் இருப்பதால், அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மறுத்தார். மேலும், கைது நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் நீதிபதி மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் 27 மணி நேரத்திற்கு பிறகு டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்றிரவு 8 மணியளவில் வந்த சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் தனது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். ப.சிதம்பரம் வருகை அறிந்து காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்கு வந்த சிபிஐ அதிகாரிகளை அக்கட்சியினர் வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு விரைந்தனர். கதவை தட்டிப் பார்த்தும் திறக்காததால் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சிதம்பரம் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். வீட்டின் பின் பக்கமும் சென்று அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வீட்டின் முன்பு குவிந்து இருந்த போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசாரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனால், டெல்லியில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.