ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கரையை கடந்த பெய்ட்டி புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
வங்கக் கடலில் உருவான பெய்ட்டி புயல் ஆந்திராவின் காக்கிநாடா மற்றும் ஏனாம் இடையே கரையை கடந்தது. காட்ரேனிகோடா அருகே கரையை கடந்தபோது மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன் கன மழையும் கொட்டியது. பலத்த காற்று காரணமாக விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. புயலின் தாக்கத்திற்கு கிழக்கு கோதாவரி மாவட்டம் சின்னாபின்னமானது. மரங்கள், மின்கம்பிகள் முறிந்து விழுந்தன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தாழ்வான பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. விஜயவாடா அருகே கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.