எப்போதும் ரவுடித் தனத்தில் ஈடுபடும் ஒரே கட்சி திமுக என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் தெருவில், கூட்டணி வேட்பாளர் மோகன்ராஜூக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவர், நில அபகரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக செயலாற்றி, ஏழை மக்களுக்கு நிலத்தை மீட்டுக் கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசு என்றார். பின்னர் திருவொற்றியூர் எண்ணூர் – மணலி சந்திப்பில் வாக்குகளை சேகரித்த முதலமைச்சர் ஏழை மக்களுக்கு அடுக்குமாடி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது அதிமுக அரசு தான் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுகவை வீழ்த்த முயற்சித்தவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டினார். பெரம்பூர் முல்லை நகரில் பிரசாரம் செய்த அவர், திமுக ஒரு கார்பரேட் கம்பெனியென்றும், குடும்ப ஆட்சி திமுகவில்தான் உள்ளது என்றும் விமர்சித்தார். எதிரிகளுடன் கைகோர்த்த துரோகிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் சிறப்பான மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். சென்னை மாநகரம் முழுவதும் 2 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் இதனால், குற்றச் செயல்பாடுகள் பெருமளவு குறைந்து இருப்பதாகவும் அவர் கூறினார்.