நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாகவே நிறைவு பெற்றுள்ளது.

கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மொத்தம் 20 நாட்கள் வேலை நாட்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா உறுப்பினர்கள் விவாதமின்றி இரு அவைகளும் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, அவை மாண்பை மீறி நடந்து கொண்டதாக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் மீது மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார்.

இந்த இரண்டு விவகாரங்களை கிளப்பி இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், லக்கிம்பூர் கொலை வழக்கு தொடர்பான சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையை சுட்டிக் காட்டியும் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

விவசாயிள் கொலை வழக்கில் தொடர்புடைய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்றத்தை தினமும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முடக்கினர்.

இந்நிலையில், மக்களவை இன்று கூடியதும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் ஈடுபட்டதால், அவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஒம் பிர்லா அறிவித்தார். முதல் நாள் அமர்வில் பங்கேற்ற பிரதமர், அதன் பிறகு கடைசி நாள் அமர்வில் வந்து கலந்து கொண்டார்.

இதே போன்று, மாநிலங்களவையும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அதன் தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்தார். இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒரு நாள் முன்னதாகவே நிறைவு பெற்றுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் தேர்தல் சீர்திருத்த மசோதா, பிறப்பு, இறப்பு தேதியை இதர ஆவணங்களுடன் இணைக்கும் மசோதா, 6 மருந்தியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு தேசிய அந்தஸ்து மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்தும் மசோதா உள்பட 4 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

மக்களவை 82 சதவிகிதம், மாநிலங்களவை 47 சதவிகிதம் வரை அலுவல்கள் நடந்ததாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

 

Exit mobile version