நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து!

கொரோனா பரவல் காரணமாக குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதியில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், டெல்லியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. அதே நேரம், குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மக்களவை தயாராக உள்ளது என சபாநாயக் ஓம் பிர்லா தெரிவித்தார். இந்நிலையில், நடப்பாண்டு குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்படுவதாகவும், ஜனவரியில் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டலாம் என அனைத்து கட்சிகளும் விரும்புவதாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்திற்கு காரணமான வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கோரிக்கைக்கு பதிலளித்த கடிதத்தில், பிரகலாத் ஜோஷி இதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version