நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 18 ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கடந்த வாரம் டெல்லியில் கூடிக் குளிர்காலக் கூட்டத் தொடரை நடத்துவது பற்றி விவாதம் நடத்தியது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் செயலாளர்களுக்கும் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை குறித்து இந்தக் கூட்டத் தொடரில் பிரச்சனை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதேபோல் விவசாயம், வங்கித்துறை ஆகியவற்றில் அரசின் கொள்கைகள் பற்றியும் எதிர்க்கட்சிகள் பிரச்சனை எழுப்பத் திட்டமிட்டுள்ளன. காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்தும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும் எனக் கூறப்படுகிறது. குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா உட்படப் பல்வேறு மசோதாக்களை இந்தக் கூட்டத்தொடரில் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.