நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்ததை அடுத்து இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் இ சிகரெட்டைத் தடை செய்யும் சட்ட மசோதா, பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை மேலும் பத்தாண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான சட்டத் திருத்த மசோதா, குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா ஆகியன கொண்டுவரப்பட்டு இரு அவைகளிலும் உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பின் நிறைவேற்றப்பட்டன. கூட்டத் தொடரின் நிறைவுநாளான இன்று ராகுல்காந்தியைக் கண்டித்து இரு அவைகளிலும் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து முதலில் இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டன. 12 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியதும் பாஜக உறுப்பினர்கள் ராகுல்காந்தி மன்னிப்புக் கேட்கக் கோரி முழக்கமிட்டதால் அவைத் தலைவர் ஓம் பிர்லா தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார். அதேபோல் 12 மணிக்கு மீண்டும் மாநிலங்களவை கூடியபோது உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் ஒரு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின் ஒரு மணிக்கு மீண்டும் கூடியதும் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார்.

Exit mobile version