சென்னை, மயிலாப்பூர் நாகேஸ்வரா ராவ் பூங்கா சாலையோரத்தை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வேதனை தெரிவித்துள்ள நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்த செய்தித் தொகுப்பை பார்ப்போம்…
சென்னை மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்கா அருகே தான் இப்படி இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் மற்றும் வேன் என வரிசைகட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்கு வரும் பொதுமக்களும், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்கு வருபவர்களும் இந்த சாலையை கட்டணமில்லாத, ‘பார்க் கிங்’ பகுதியாக பயன்படுத்தி நாள்தோறும் வாகனங்களை பூங்கா சாலையோரம் நிறுத்திச் செல்கின்றனர். குறுகலான தெருக்களை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர் இப்பகுதியில் வசிப்பவர்களும், நாள்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களும்.
ஏற்கனவே இப்பகுதியில் குடியிருப்போர் இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காததால், இங்கு நிறுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் . எனவே, மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் பரிசீலித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த பிரச்னைக்கு, உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Discussion about this post