சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட பார்கர் சோலார் புரோப் விண்கலம்

சூரியனை ஆய்வு செய்ய ‘பார்கர் சோலார் புரோப்’ என்ற விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது . அது தற்போது சூரியனை பற்றிய ஆய்வுகளை அனுப்பி உள்ளது . பார்கர் சோலார் அனுப்பிய தகவல்கள் என்ன? 

பூமி சூரியனில் இருந்து சுமார் 93 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது. முதன்முதலாக சூரியனை பற்றிய ஆய்வுக்காக பார்க்கர் என்ற விண்கலத்தை, டெல்டா 4 ராக்கெட் மூலம், நாசா கடந்த 2018ம் ஆண்டு அனுப்பியது. இந்த விண்கலம் சூரியனுக்கு அருகில் சுற்றியபடி ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு மேற்கொள்ளும் முதல் விண்கலம் இது ஆகும்.

சூரிய மண்டலத்தின் ஒளிவட்ட பகுதியான கரோனாவில் இதுவரை ஆய்வு செய்யப்படாத 24 இடங்களை ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 3 இடங்களின் ஆய்வினை, பார்க்கர் விண்கலம் முடித்து விட்டது. இந்த விண்கலம், பூமிக்கு அனுப்பியுள்ள தகவல்கள் இயற்கை என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் உள்ள தகவல்களின் படி சூரியனின் ஒளிவட்ட பகுதியில் சூரியனில் இருந்து 10 லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பமான சூரிய காற்று வெளிப்படுவதாகவும் இதில், 2 வகை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒன்று மெதுவாகவும், மற்றொன்று வேகமாகவும் வெளியேறிவருகிறது. இவை எங்கிருந்து தோன்றுகின்றன? மெதுவாக வெளிப்படும் சூரியக் காற்று கரோனா பகுதியில் எப்படி வேகம் எடுக்கிறது? என்பதை கண்டுபிடிப்பதுதான் பார்க்கர் விண்கலத்தின் ஆராய்ச்சியாக இருந்தது. வினாடிக்கு 500 கி.மீ முதல் 1000 கி.மீ வேகத்தில் வெளிப்படும் சூரியக் காற்று, சூரியனின் வட மற்றும் தென் துருவ பகுதியில் கரோனாவின் பெரிய துளைகளில் இருந்து வெளிப்படுகின்றன.

இதன் பாதி வேகத்தில் வெளிப்படும் மெதுவான சூரியக் காற்று, வேகமான சூரியக் காற்றின் அடர்த்தியை விட அதிகமாக உள்ளது. ஆனால், இது எங்கிருந்து வெளிப்படுகிறது என்பதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை என நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த சூரியக் காற்றில் புரோட்டான், ஹீலியம் அணுத்துகள்கள் உள்ளன. இவை சூரியனின் ஈர்ப்பு சக்தி பகுதிக்குள் பயணிக்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள், சூரியனில் இருந்து வெளிப்படும் துகள்களின் செயல்பாடுகள் பற்றி புதிய தகவல்களை தெரிவிக்கின்றன என நாசா கூறியுள்ளது. பார்க்கரின் முழு ஆய்வு முடியும் போது சூரியனில் மறைந்திருக்கும் ரகசியங்கள் வெளி வரும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

Exit mobile version