அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதில் பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 87 அரசு பள்ளிகள் 90.60 சதவீதமும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 147 அரசு பள்ளிகள் 97.63 சதவீதமும், +1 பொதுத் தேர்வில் 88 அரசு பள்ளிகள் 95.43 சதவீதமும் தேர்ச்சிபெற்றன. பொத்தேர்வுகளில் 78 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைபுரிந்துள்ளன. அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை பள்ளி கல்வித் துறை செயல்படுத்தி வருவதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகள் அதிகளவிலான தேர்ச்சி பெற்று வருகின்றன.

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு 40 நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சியாக வழங்கப்பட்டது. இதுமட்டும் அல்லாமல் மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள், காலணிகள், ஸ்கூல் பேக்குகள், மடிக்கணினிகள், மிதிவண்டிகள், புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், கணித உபகரணங்கள் உள்ளிட்டவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 20 நாட்களில் மட்டும் 10 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version