2 வயது குழந்தையின் சிகிச்சைக்கு ரூ.22 கோடி நிதி திரட்டும் பெற்றோர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தையின் குடும்பத்தினரை நேரில், சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, சிகிச்சைக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

குமாரபாளையத்தை சேர்ந்த சதீஸ்குமார் – பிரியதர்ஷினி தம்பதியின் 2 வயது மகள் மித்ரா, அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து மருந்து இறக்குமதி செய்ய 22 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்காக சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெற்றோர் நிதி சேகரித்து வருகின்றனர். இது குறித்து அறிந்த முன்னாள் மின்சாரத் துறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி, பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தனது சொந்த நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மூலம், மத்திய அரசிடம் பேசி குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறினார். தமிழ்நாட்டில் இது போன்று அரிய வகை நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு அரசு சார்பில் உதவிகள் கிடைக்க சட்டமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்தப்படும் என்றும் கூறினார்.

 

 

Exit mobile version