உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்குகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் ஏழாம் நாளில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று அதிகாலை சிவாச்சாரியார்கள் கைகளில் பரணி தீபத்தை ஏந்தியபடி வலம் வந்தனர். அதனை தொடர்ந்து கொடிமரம் அருகில் உள்ள விநாயகர், முருகர் ஆகியோருக்கு ஆராதனை காட்டப்பட்டு மீண்டும் கோயிலின் மூல ஸ்தானத்தில் ஆராதனை காட்டப்பட்டது. பின்னர் மூலவர் சன்னதியின் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
லட்சக்கணக்கான பக்தர்கள் பரணி தீப தரிசனத்தை கண்டனர். இதனிடையே, திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது. அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீப தரிசனத்தை காண சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால், திருவண்ணாமலை விழா கோலம் பூண்டுள்ளது.