பரம்பிக்குளம் – ஆழியாறு நீர்ப்பாசனத் திட்டம் குறித்த சிறப்பு தொகுப்பு
தமிழகம் – கேரளம் இடையே மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தோன்றும் பல சிற்றாறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டி அதன்மூலம் கிடைக்கும் நீரை இருமாநிலங்களும் பகிர்ந்துகொள்ளும் கூட்டுத் திட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்.
இந்தத் திட்டம் 1958 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்படி சோலையாற்றில் இரு அணைகளும் பரம்பிக்குளம், பெரும்வாரிப் பள்ளம், தூணக்கடவு, நீராறு ஆகிய ஆறுகளில் ஒவ்வொரு அணையும் கட்டப்பட்டன.
இது தவிர ஆழியாற்றில் ஒரு அணையும் பாலாற்றில் திருமூர்த்தி அணையும் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகள் சுரங்கங்கள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தமிழகத்தின் கோவை, திருப்பூர் மாவட்டங்கள், கேரளத்தின் பாலக்காடு மாவட்டம் ஆகியவற்றில் அமைந்துள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ் கேரளப் பகுதியில் உள்ள அணைகளின் பராமரிப்பு இயக்கத்தையும் தமிழகமே செய்து வருகிறது. சோலையாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு 28 டிஎம்சி நீர், கேரளத்துக்கு பத்தொன்பதரை டிஎம்சி நீர், ஆழியாறு அணையில் இருந்து கேரளத்துக்கு ஏழேகால் டிஎம்சி நீர் என உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.
உடன்பாட்டின்படி தண்ணீர் விடப்படுவதில்லை என இரு மாநிலங்களும் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் பற்றித் தமிழக – கேரள முதலமைச்சர்கள் இன்று பேச்சு நடத்துகின்றனர்.