பரமத்தி வேலூர் அருகே உள்ள அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றில், இரவு நேரத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜை, அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டதால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூரில் இருந்து பரமத்தி வேலூர் அருகே உள்ள அனிச்சம்பாளையம் வரை காவிரி கரையோர பகுதிகளை தனது ஆதரவாளர்களுடன் ஆய்வு செய்தார். அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றில் ஆய்வு செய்து திரும்பும் போது அங்கு நின்றிருந்த பெண்களிடம் நான்தான் உங்கள் தொகுதி எம்.பி. இங்கு மணல் பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. அதற்காகதான் ஆய்வு செய்ய வந்தேன். இதுபற்றி உங்களுக்கு தெரியுமா? என கேட்டுள்ளார்.
அப்பொழுது அங்கு கூடிய பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அவரிடம் இதுவரை இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லை,பேருந்து வசதி இல்லை, தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதையெல்லாம் விட்டு மணலை ஆய்வு செய்கிறேன் என கூறி இரவு நேரத்தில் காவிரியாற்றுக்குள் சென்றது எதற்காக? மக்களின் அடிப்படை தேவைகளை விட மணல் பிரச்சனைதான் இப்போது முக்கியமா? என எம்.பி.யிடம் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் பேசாமல் எம்.பி.சின்ராஜ் காரில் ஏற முயன்றார்.உடனே ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை முற்றுகையிட்டனர்.
உடனடியாக பரமத்தி வேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனிச்சாமி தலைமையிலான காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜை அங்கிருந்து பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது. சின்ராஜ் இதுபோல அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதும், மக்களிடம் பல்பு வாங்குவதும் வாடிக்கையாகி வருகிறது. மேலும் இவரது தனிச்சையான நடவடிக்கைகளால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது என பொதுமக்கள் கூறுகின்றனர்.