மோத்தேபாளையம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது

கோவை மாவட்டம் மோத்தேபாளையம் அருகே, ஆடு, மாடுகளை சூரையாடி, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் கூண்டு வைத்து பிடித்தனர். கடந்த சில மாதங்களாக சென்னாமலை கரடு மலை அடிவாரப் பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றி திரிவதாகவும், வீட்டு வளர்பு விலங்குகளை கடித்து கொல்வதாகவும் அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதன் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட வனத்துறை அதிகாரிகள், அங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, சென்னாமலை கரடு அருகே சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் வைத்த கூண்டில், சிறுத்தை சிக்கியது.

பிடிபட்ட சிறுத்தையை பத்திரமாக மீட்ட வனத்துறை அதிகாரிகள், டெம்போவில் ஏற்றி, சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிக்கு கொண்டு சென்று பத்திரமாக விட்டனர். அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Exit mobile version