பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சித்து, ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மான் ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 20ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 25ம் தேதி தொடங்கியது.
பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சித்து, தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.
இவரை எதிர்த்து பாஜக சார்பில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை ஆணையராக பணியாற்றிய ஜக்மோகன் ராஜூ போட்டியிடுகிறார்.
துரி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மான் வேட்பு மனு தாக்கல் செய்தார். பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வந்த பகவந்த் மான், 2014-ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
2014, 2019ம் ஆண்டு பொதுத் தேர்தல்களில், சங்க்ரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், தற்போது மக்களவை உறுப்பினராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.