திருப்பூரில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல், தீபாவளிக்கான ஆர்டரும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்த திருப்பூர் பின்னலாடை கான்ட்ராக்டர் தனது நிறுவனத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உற்பத்தியாளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது…
திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காஜா உசேன். இவர் ராக்கியாபாளையம் பகுதியிலுள்ள இஸ்மாயில் என்பவருக்குச் சொந்தமான பனியன் நிறுவனத்தில் காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருகிறார். மாதம் முப்பதாயிரம் முதல் 40 ஆயிரம் அளவிளான ஆர்டர்கள் கிடைத்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முறையான சம்பளம் கிடைக்கப் பெறாமலும் வேலை இல்லாததாலும் தன்னிடம் பணியாற்றியவர்களுக்கு சம்பளம் கொடுக்க கடன் வாங்கி வந்துள்ளார். மேலும் தீபாவளி நேரத்தில் உரியவர்கள் கிடைத்தால் இதனை சமாளித்துவிடலாம் என்று இருந்த நிலையில் தற்போது தீபாவளி ஆர்டர்களும் இன்றி ஏமாற்றம் அடைந்ததால், மனமுடைந்த காஜா உசேன் மன விரக்தியில் தனது நிறுவனத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த நல்லூர் காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு சோதனைக்கு அனுப்பி உள்ளனர்.தற்போது தீபாவளிக்கும் ஆர்டர்கள் கிடைக்காமல் பலரும் ஏமாற்றத்தில் உள்ள சூழ்நிலையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.