திருவாரூர் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து, தேர்தலுக்காகப் பெறப்பட்ட வேட்புமனுக்கள் கிழித்து வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை முடிவடைய உள்ள நிலையில், திருவாரூர் மாவட்டம் வடகண்டம் ஊராட்சியில் 27 பேர் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் ஊராட்சி செயலாளர் காலை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்த போது, அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் உள்ளே வைக்கப்பட்டிருந்த வேட்பு மனுக்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டுக் கழிவறையில் வீசப்பட்டிருந்தது. விண்ணப்பக் கட்டணமாப் பெறப்பட்டிருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த காவல்துறையினர், தேர்தலைச் சீர்குலைக்கும் நோக்குடன் இச்சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.