நவீன நாடகங்களின் முன்னோடியாகத் திகழ்ந்த பம்மல் சம்மந்தனாரை பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு
பம்மல் சம்மந்தனார், சென்னையில் பம்மல் என்ற கிராமத்தில் 1873-ஆம் ஆண்டு பிறந்தார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தொடங்கிய அவரின் கல்வி, நவீன ஆங்கில அறிவுடன் சிறந்து விளங்கியது. கல்விக்கு நடுவே சமூக மேம்பாடு குறித்தும் அவர் இளமையிலேயே ஆழ சிந்திக்கவும் தொடங்கினார்.
மாநிலக் கல்லூரியில் பி.ஏ படித்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடப்பிரிவு, சட்டக் கல்லூரியில் சட்டம் என, தன்னை சகல துறைகளிலும் தேர்ந்த அறிஞனாக வடிவமைத்துக்கொண்டார்.
பல்வேறு மொழிகளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களைத் தொகுத்து, தமிழ் நாடகமாக அரங்கேற்றி, உரையாடல் மூலம் சமூகக் கலாசார உணர்வுகளைப் பரப்பினார். கால நேரம் நிர்ணயிக்காமல் நடந்துகொண்டிருந்த நாடகத்தை, 3 மணி நேரம் என ஒரு கால அளவுக்குள் கொண்டுவந்து புதுமையைப் படைத்தார்.
பம்மல் சம்பந்த முதலியார் வாழ்ந்த காலத்தில், நாடகத் தொழிலுக்கு மரியாதை குறைவு. நடிப்பவர்களை கூத்தாடிகள் என்றே அழைப்பார்கள். நாடகங்களில் பாடல்கள் அதிகம். நாடகத்துக்குச் சென்றுவந்தால் இசைக் கச்சேரிக்குச் சென்றுவந்த உணர்வுதான் ஏற்படும். அந்தச் சூழலை மாற்றியவர் சம்பந்தனார்தான்.
“நாடகத் தந்தை” என்று அவரை கூறுவதைவிட “நாடகக் கலையின் பிதாமகர்” என்று அழைப்பதே பொருத்தமாகும். அந்த அளவுக்கு மிக கவனத்தோடு நாடகக் கலையை வளர்த்தார். 1959-ஆம் ஆண்டு இவருக்கு “பத்மபூஷண்” விருதை இந்திய அரசு வழங்கி சிறப்பித்தது.
நாடகக் கலைக்கே தனிச் சிறப்பும் மரியாதையும் ஏற்படுத்திய பம்மல் சம்பந்தர், தனது 91வது வயதில் இறைவனிடம் சேர்ந்தார்.
அவரின் உன்னத படைப்புகளைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதே, அவரின் நினைவுதினமான இன்று நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி.