இராமேஸ்வரத்தில் பாம்பன் குந்துகால், சிங்கிலி தீவு முதல் குருசடை தீவு வரையிலான கடல் பகுதியில் நீரானது இன்று வழக்கமான நிறத்தில் இருந்து நிறம் மாறி, பச்சை நிறத்தில் பாசிபடர்ந்துக் காட்சியளித்தது.
இதனால் பாதிக்கப்பட்ட கடல்வாழ் மீன்களான கிளி, ஒரா, காரல், விலாங்கு உள்ளிட்ட பல வகை மீன்களும் இறந்து கரை ஒதுங்கி உள்ளன.
இதனைக் கண்ட அப்பகுதி மீனவர்கள், மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து , அங்கு வந்த ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் குழுவினர், பச்சை நிறமாக மாறியிருந்த கடல் நீரையும், இறந்து கிடந்த மீன்களையும் சோதனையிட்டனர்.
பின்னர் இதுகுறித்து பேசிய விஞ்ஞானிகள், ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம்
வரை தென்கடல் பகுதியில், குறிப்பிட்ட சில நாட்களுக்கு கடலில் உள்ள ‘நாட்டிலூகா‘ பாசியின் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்தனர்.
இந்த சமயத்தில், பாசியானது கடலின் மேற்பரப்பு முழுவதும் படர்வதால், கடல்நீர் முழுவதும் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் எனவும் கூறினர்.
இவ்வாறு படரும் பாசியானது, மீன்களின் செதில்களில் அடைத்துக்கொள்வதால் அவற்றால் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி இறக்கின்றன எனவும் விளக்கம் அளித்தனர்.
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது கடலானது அதிகளவில் பச்சை நிறமாக
மாறியுள்ளது. இதனால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும், இதுபற்றி மீனவர்கள் பயப்பட தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.