நெல்லை பாளையங்கோட்டையில் இளம்பெண்களை ஏமாற்றி 6 திருமணம் செய்த இளைஞரையும், உறவினர் போல் நடித்த 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.
நெல்லை என்.ஜீ.ஓ.பி காலனி உதயாநகரைச் சேர்ந்த ஜோசப் ராஜின் மகள் விஜிலாராணிக்கும், தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தைச் சேர்ந்த வின்சென்ட் பாஸ்கருக்கும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் புரோக்கர் இன்பராஜ் ஏற்பாட்டில் திருமணம் நடந்துள்ளது.
வரதட்சணையாக 3 லட்சம் ரூபாய் தரப்பட்ட நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே விஜிலாராணியின் 40 சவரன் தங்கநகையை வின்செண்ட் பாஸ்கர் விற்று மோசடி செய்துள்ளார்.
இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விஜிலாராணி தெரிவித்ததன் பேரில் ஜோசப்ராஜ் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில் வின்சென்ட் பாஸ்கர் ஏற்கனவே 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக திசையன்விளை அருகில் உள்ள சுவேசபுரத்தில் அவரைக் கைது செய்த போலீசார், உறவினர்கள் போல் நடித்து வின்செண்ட் ராஜின் மோசடிக்கு உதவியதாக 2 பெண்களையும் கைது செய்தனர். மேலும் புரோக்கர் இன்பராஜை தேடி வருகின்றனர்.