திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நடைபெறவுள்ள தைப்பூசத்தை முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் கடந்த 2ம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 7ம் தேதியும், தைப்பூசத் தேரோட்டம் 8ம் தேதியும் நடைபெறவுள்ளது. தைப்பூசத் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு யாத்திரை வருவது வழக்கம். இந்நிலையில் பக்தர்கள் வசதிக்காக 300க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகள் வந்து செல்ல பழனி பேருந்து நிலையத்தில் இடவசதி இல்லாததால் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், இங்கு பக்தர்களின் வாகனங்கள் நிறுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.