பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியல் தொகை நான்கரை கோடி ரூபாயை எட்டியது.
தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். தைப்பூச பக்தர்கள் கூட்டத்தால் கோயில் உண்டியல் 15 நாட்களில் நிறைந்தது. இதைத்தொடர்ந்து உண்டியல் திறக்கப்பட்டு 2 நாட்கள் எண்ணப்பட்டதில் காணிக்கையாக 4 கோடியே 66 லட்சத்து 6 ஆயிரத்து 230 ரூபாய் கிடைத்துள்ளது. பக்தர்கள் தங்கத்தாலான வேல், பட்டை, தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன சிறிய வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கத்தின் எடை 917 கிராமும், வெள்ளி 37 ஆயிரத்து 170 கிராமும் இருந்ததாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.