உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது. வாடிவசாலில் வழியாக சீறி பாய்ந்து வந்த காளைகளுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மதுரை மாவட்டம், பாலமேட்டில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி விமர்சையாக தொடங்கியது. 988 காளைகளும், 846 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ள போட்டியை, மாவட்ட ஆட்சியர் நடராஜன் தொடங்கி வைத்தார். சீறி வந்த காளைகளுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாலை 4 மணி வரை நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில், காளைகள் மற்றும் காளையர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளன. வெளிநாடுகள், மாநிலங்கள், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் குவிந்துள்ளதால், 30 டிஎஸ்பிக்கள் தலைமையில் ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு போட்டி நடைபெற்று வருகிறது. 500 காளைகள், 600 காளையர்கள் பங்குபெற்ற போட்டியை நாடாளுமன்ற உறுப்பினர் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
காளைகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.