கோவையில் வரும் 23 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி: சுமார் 900 காளைகள் பங்கேற்பு

கோவை செட்டிபாளையத்தில், வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில், 900க்கும் அதிகமான காளைகள் களமிறக்கப்பட உள்ளதாக, நல்லறம் அறக்கட்டளை நிறுவனரும் கோவை ஜல்லிகட்டு சங்கத்தின் தலைவருமான எஸ்.பி.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

செட்டிபாளையம் எல் & டி பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில், வரும் 23 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்கென கடந்த 8 ஆம் தேதி ஜல்லிக்கட்டு வாடிவாசல் பூஜையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கால்கோல் நட்டு தொடங்கி வைத்தார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.அன்பரசன், தமிழகத்திலேயே மிகப் பெரிய கேலரி கோவையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஜல்லிகட்டு நடைபெறும் மைதானத்தில், மருத்துவம், ஆம்புலன்ஸ், பேருந்து, பார்க்கிங் வசதி, கழிப்பறை என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டு மாடுகளின் கண்காட்சி, கிராமிய நடனம் உள்ளிட்டவையும் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், வெற்றி பெறும் அனைத்து வீரர்களுக்கும் ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் தங்க காசு வழங்கப்படும் எனவும் எஸ்.பி.அன்பரசன் கூறினார்.

Exit mobile version