பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது. இதில் 700 காளைகளும், 936 வீரர்களும் களமிறங்க உள்ளனர்.

மாட்டுப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரை பாலமேட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும். மகாலிங்கம் சாமி மடத்துக் கமிட்டி சார்பில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை சுமார் 8 மணியளவில் தொடங்கியது. இதில் பங்கேற்க 700 காளைகளும், 936 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வாடிவாசல் வழியாக மகாலிங்கம் சாமி கோவில் காளை, முதல் காளையாக களமிறங்கியது. அதன்பிறகு, போட்டிக்கான காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக களமிறங்கும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை களத்தில் இருக்கும் மாடுபிடி வீரர்கள் குழு மாற்றப்பட்டு, புதிய குழு களமிறக்கப்படும். மாலை 4 மணிவரை பாலமேடு ஜல்லிகட்டு நடைபெறும். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக, 2,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

Exit mobile version