காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க முயன்ற பாகிஸ்தான் முயற்சி தோல்வி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் மூலம் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க முயன்ற பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஜம்மு காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து ஐ.நா.விடம் பாகிஸ்தான் முறையிட்டது. பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த சீனா, காஷ்மீர் விவகாரம் குறித்து பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை நடத்த வலியுறுத்தியது. இதையடுத்து, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் மூடப்பட்ட அறைக்குள் ஆலோசனை நடைபெற்றது. இதில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை சர்வதேச பிரச்சனையாக்க பாகிஸ்தானும், சீனாவும் முயற்சி செய்தன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே தெரிவித்தது. ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தன. காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம் என்றும் இதை விவாதிக்க அவசியமில்லை என்று அதிக நாடுகள் தெரிவித்ததால், பாகிஸ்தான், சீனாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி சையது அக்பருதீன், காஷ்மீர் முற்றிலும் இந்தியாவின் உள்விவகாரம் என்றார். மேலும் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பாராட்டு தெரிவித்ததாக கூறினார்.

Exit mobile version