இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தான் ராணுவ வீரரை, இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பாக திருப்பி அனுப்பி வைத்த சம்பவம் அனைவரது மனதை நெகிழ வைத்துள்ளது.
கடந்த மே மாதம் 17ந் தேதி பாகிஸ்தானின் முசாபராபாத் நகரை சேர்ந்த சபீர் அகமது என்ற ராணுவ வீரர், தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டார். இதனையடுத்து, தன்க்தர் கிராம மக்கள் உதவியோடு இந்திய ராணுவத்தினர் சபீர் அகமதை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தவறுதலாக எல்லை மீறியது தெரியவந்ததை அடுத்து, பாகிஸ்தானிற்கு அவரை பாதுகாப்பாக அனுப்ப இந்திய ராணுவம் முடிவு செய்தது. மேலும் உரிய மருத்துவ கவனிப்பும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், தன்க்தர் அருகே உள்ள இந்திய – பாகிஸ்தான் எல்லையில், அவர் பத்திரமாக அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அவருக்கு இந்திய ராணுவம் சார்பில் ஆடை மற்றும் பரிசும் வழங்கப்பட்டது. இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த அவரை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் வழி அனுப்ப வைத்த இந்திய ராணுவத்திற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.