ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்த நிலையில், ஒரு ராணுவ வீரர் மரணமடைந்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே அமைதி பேச்சுவார்த்தை குறித்து யோசிக்க முடியும் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆயினும் தாக்குதல் சம்பவங்கள் தொடர் கதையாகவே உள்ளது.
இந்நிலையில் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலையில் தாக்குதல் நடத்தியுள்ளது. சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோட்டார் ரக ஆயுதங்கள் மூலம் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. ஆயினும் இந்த தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலையடுத்து எல்லைக் கட்டுபாட்டு பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.