அரசியல் கட்சிகளையும், தனி நபர்களையும் கேலி செய்து எடுக்கப்படும் அரசியல் நையாண்டி நிகழ்ச்சிகளுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனி மனிதர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு எதிராக, டிவி நிகழ்ச்சிகளில் கேலி சித்திரம், போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள் மற்றும் மீம் உள்ளிட்டவை அதிகமாக பரவி வருவதாகவும், இதனால் நாட்டின் தலைவர்களுடைய புகழுக்கு கலங்கம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், உலகளவில் பாகிஸ்தானுக்கு இழிவை தேடி தருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், இது தொடர்பாக அனைத்து தரப்பினரிடமிருந்து அதிகளவில் புகார்கள் வருவதால், தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.