பாகிஸ்தானில் 61 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வகையில் பெய்துள்ள மழை பொழிவால் அடுத்த சில மாதங்களில் அந்நாட்டில் கடும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பருவமழை, காலநிலை மாற்றம் காரணமாக பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் அந்நாட்டின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதுவரை 1,200-க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில், இரண்டரை கோடி மக்கள் போதிய உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
வரலாறு காணாத கனமழையால் 2 கோடி ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 7 லட்சத்து 94 ஆயிரம் கால்நடைகள் பலியாகி உள்ளதாகவும், மழை வெள்ளத்தால் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ளத்தால் அந்நாட்டில் 1000 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.