இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் சதி திட்டத்தோடு, ஜெய்ஷ் இ முகமது இயக்கத் தலைவன் மசூத் ஆசாரை, பாகிஸ்தான் அரசு ரகசியமாக விடுவித்திருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு ரத்து மற்றும் அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் ராணுவ படையை குவித்து வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், ஜம்மு, ராஜஸ்தான் செக்டார் மற்றும் சியால்கோட் இடையேயான எல்லையில், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால், ராணுவ வீரர்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளனர். தேடப்படும் தீவிரவாதியான மசூத் ஆசாரை, பாகிஸ்தான் அரசு பாதுகாப்புக் காவலில் வைத்திருந்த நிலையில், ரகசியமாக விடுவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்தவே, மசூத் ஆசாரை பாகிஸ்தான் விடுவித்து இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.