இணையதள சேவைகளை முடக்கியது பாகிஸ்தான்

காஷ்மீரில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டபோது அதைக் கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் அரசு, தற்போது மொகரம் பண்டிகையை முன்னிட்டு தனது நாடெங்கும் இணைய சேவையை முடக்கி உள்ளது. கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள பாகிஸ்தானின் இந்த முரண்பட்ட நடவடிக்கை குறித்த  செய்தித் தொகுப்பு …

 

கடந்த ஆகஸ்டு மாதம் 5ஆம் தேதி காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதாக இந்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் அங்கு இணையதள சேவை முடக்கப்பட்டது. இந்திய அரசின் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கையை பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் கடுமையான விமர்சித்தார்.

பின்னர் பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் பேசிய இம்ரான் கான், ‘‘காஷ்மீரில் நடந்தது இனப் படுகொலை. இது தொடர்பாக ஐ.நா. சபையிலும் சர்வதேச நீதி மன்றத்திலும் முறையிடுவேன்’’ என்று சொன்னார். அதாவது இந்திய அரசு இணையதள சேவையை முடக்கியது படுகொலையை நடத்தத்தான் என இம்ரான்கன் வாதிட்டார்.

இந்த சூழலில், சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த பாகிஸ்தானின் சர்வதேச நீதிமன்ற வழக்கறிஞர் கவார் குரேஷி, ‘‘இந்தியாவுக்கு எதிராக நாம் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், அங்கு சமர்ப்பிக்க இந்தியாவுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை. இனப் படுகொலை குற்றச் சாட்டை நிரூபிப்பது மிகவும் கடினம். எனவே இப்போது வழக்கு தொடர முடியாது’’ என்று சொன்னபோது, இம்ரான்கான் சொன்னது பொய் என்று பாகிஸ்தான் மக்களுக்கே புரிந்தது.

இந்நிலையில் மொகரம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்போதே பாகிஸ்தானில் இணையதள சேவையும், மொபைல் சேவையும் முடக்கப்பட்டு உள்ளன. இதை அந்நாட்டு தொலைதொடர்பு ஆனையமே அறிவித்து உள்ளது. இதனால் பாகிஸ்தானில் வாழும் இசுலாமியர்கள் தங்களுக்குள் மொகரம் வாழ்த்துகளைக் கூடப் பரிமாறிக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

காஷ்மீரில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டபோது அது இனப்படுகொலைக்காக துண்டிக்கப்பட்டது – என்று சொன்ன பாகிஸ்தான் அரசு, தற்போது நாடு முழுவதும் இணைய சேவையை முடக்கி உள்ளது சர்வதேச அரங்கில் மிகப் பெரிய முரணாகப் பார்க்கப்படுகிறது. சொந்த மக்களைக் கொல்ல திட்டம் போடுகிறாரா இம்ரான்கான்? – என்று பாகிஸ்தான் அரசை நோக்கி இணையதளப் பயன்பாட்டாளர்கள் தற்போது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

 

Exit mobile version