ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த 7 ஆண்டுகளில் பாகிஸ்தான் ராணுவம் 7 ஆயிரம் முறை எல்லை தாண்டி அத்துமீறித் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் சட்டத்தின்படி எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பதிலில் இந்த விவரத்தைத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 2140 துப்பாக்கிச் சண்டைகளில் இந்திய வீரர்கள் 11 பேர் உயிரிழந்த நிலையில் 80 வீரர்கள் காயம் அடைந்தனர். இது தவிர மிகப்பெரிய தீவிரவாதத் தாக்குதல்களையும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியா மீது தொடுத்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் 60 தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருக்கலாம் என்று உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.