டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய விமானப்படை அதிகாரி வைஸ் மார்ஷல் ஆர்.ஜி.கே. கபூர் , பாகிஸ்தான் விமானப்படை இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்த வந்ததாகவும், அதற்கு தக்க பதிலடி கொடுத்து பாகிஸ்தானின் எஃப் 16 விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்திய தரப்பில் ஒரு மிக் 21 ரக விமானம் சேதமடைந்து, அதிலிருந்த விமானி பாரசூட் மூலம் குதித்ததாகவும், ஆனால், பாரசூட் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் விழுந்து, அங்கிருந்து அவர் சிறைபிடிக்கப்பட்டதாக கூறினார்.
பிப்ரவரி 27ம் தேதி அன்று, 10 மணி அளவில், இந்திய விமானப்படை ராடாரில், பாகிஸ்தான் விமானப்படையின் பல விமானங்கள் இந்திய எல்லைப்பகுதியான ஜாங்கர் நோக்கி வருவது தெரிந்தது. அவைகள், மேற்கு ரஜோரியின் சுந்தர்பனி பகுதியில் இந்திய எல்லைக்குள் வந்தன. அதில், பல வகையான போர் விமானங்கள் இருந்தன. அவைகளை இடைமறிக்க, இந்திய விமானப்படை விமானங்கள், மிக் 21 பைசன், சுகோய் 30 எம்.கே.ஐ, மிராஜ் 2000 ஆகிய போர் விமானங்கள் அனுப்பப்பட்டன. இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து வந்த பாகிஸ்தானின் போர் விமானங்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. வானில் நடந்த சண்டையில், இந்திய விமானப்படை ஒரு மிக் 21 ரக விமானத்தை இழந்தது. அதிலிருந்த விமானி பத்திரமாக குதித்துவிட்ட போதிலும், அவருடைய பாரசூட், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஐம்மு காஷ்மீர் பகுதியில் விழுந்து, அங்கிருந்து பாகிஸ்தான் ராணுவத்தால் அவர் சிறைபிடிக்கப்பட்டார்.