பாக். பிரதமர் இம்ரான்கான் பதவி விலகக்கோரி தொடரும் தீவிர போராட்டம் – பின்னணி என்ன?

பாகிஸ்தானில் நடைபெறும் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி பல ஆயிரக்கணக்கான மக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 

பாகிஸ்தானின் தெஹ்ரீக் – இ – இன்சாஃப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் கடந்த வருடம் அந்நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவியேற்றதில் இருந்து தற்போதுவரை, நிதி நெருக்கடி, உலக நாடுகளின் எதிர்ப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

இதற்கிடையில், இம்ரான்கான் பதவி விலக வேண்டும் என தற்போது புதிய சர்ச்சை வெடித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஜாமியத் உலேமா- இ – இஸ்லாம் என்ற கட்சியின் தலைவர் மவுலானா ஃபஸ்லுர் ரஹ்மான், கடந்த சில மாதங்களாக இம்ரானுக்கு எதிராகக் குரல் கொடுத்துவருகிறார். இம்ரான்கான் ஆட்சியில் பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் சீர்கெட்டுள்ளது என்றும், அவரின் தவறான நிர்வாகத்தால், மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தில்லுமுல்லு செய்து இம்ரான் வெற்றி பெற்றுவிட்டார் என்பதும் மவுலானாவின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த நிலையில், இம்ரான்கான் பதவி விலக வேண்டும் என்று கடந்த மாதம் பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் ஒரு சிறிய பேரணியைத் தொடங்கினார் மவுலானா. அந்தப் பேரணி பல மாகாணங்களைக் கடந்து நேற்று இஸ்லாமாபாத்துக்கு வந்து சேர்ந்தது. நூற்றுக்கணக்கானவர்களின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட பேரணி, இஸ்லாமாபாத்துக்கு வந்தபோது பல ஆயிரக்கணக்கானவர்களின் ஆதரவைப் பெற்று, போரட்டம் தீவிரமாகி வருகிறது. இந்த போராட்டத்தில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இம்ரானுக்கு இரண்டு நாள் அவகாசம் அளிக்கிறோம், அதற்குள் அவரே தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், இந்தப் பேரணி அமைதியான முறையில் நடைபெறுகிறது, எங்கள் பொறுமையை சோதித்துப் பார்க்காதீர்கள், பிரதமர் ராஜினாமா செய்யும்வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்று மவுலானா கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதையடுத்து பாகிஸ்தான் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் இம்ரான்கான், அதிகாரத்தைப் பெற்ற நாள்கள் போய்விட்டன. இது புதிய பாகிஸ்தான். நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் போராடுங்கள், போராட்டக் களத்தில் உங்களின் உணவு தீர்ந்துவிட்டால் நாங்கள் இன்னும் நிறைய அனுப்புகிறோம். ஆனால், ஒரு நாளும் உங்களுடன் சமாதானமாகப் போக மாட்டோம். உங்களுக்கு யாரிடம் இருந்து விடுதலை வேண்டும் ? எதற்காகப் போராடுகிறீர்கள் ? உங்களின் போராட்டத்தைப் பார்த்து நம் எதிரிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்” என்று மவுலானாவை தாக்கிப் பேசியுள்ளார். ஆனாலும், போராட்டம் தொடர்வதால், இம்ரான்கான் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version