பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளரிடம் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணை

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக, பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் ஆகியோர், மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைத்தில் ஆஜராகினர்.

சென்னை கே.கே. நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளர். இது தொடர்பாக பள்ளியின் முதல்வர் கீதா, தாளாளர் ஷீலா ஆகியோரிடம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி மற்றும் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும் தாளாளருக்கு மாநில குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநில குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தில் பத்ம சேஷாத்ரி பள்ளியின் முதல்வர் கீதா மற்றும் தாளாளர் ஷீலா ஆகியோர் ஆஜரானர். இருவரிடமும் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டதாக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் சரஸ்வதி ரெங்கசாமி தெரிவித்தார்.

Exit mobile version