சீர்காழி அருகே, கனமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கியதால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களான சந்தைப்படுகை, முதலைமேடு திட்டு, காட்டூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் சேதமடைந்த பயிர்களை, பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பாதுகாத்து வந்தனர். 10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தற்போது பெய்த கனமழையால் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளன.
4 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வடியாமல் உள்ள நிலையில், நெல்மணிகள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சேதமடைந்த நெல்மணிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.