ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, 26ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிபிஐ அதிகாரிகளால் கடந்த புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை என்பதால் அவரை, காவலில் விசாரிக்க அனுமதி கோரி வாதிட்டனர். அதேசமயம் ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ப.சிதம்பரத்தை வருகிற 26ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கினார். இதையடுத்து நீதிமன்ற அறையிலேயே சிதம்பரத்திற்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர், சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு பற்றி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்த நிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.