ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வரும் 25ஆம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடு பெற்றதில் உள்ள விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருக்க அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் அவரது மகன் கார்த்தியும் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிதம்பரத்தின் ஜாமின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்நிலையில் ஜாமின் கோரிச் சிதம்பரம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வரும் 25ஆம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஜாமின் மனு மீது வரும் 26ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும் என அறிவித்தனர்.