ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், வரும் 19ம் தேதி வரை ப. சிதம்பரத்தை சிறையில் அடைக்க, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக கடந்த மாதம் 21 ஆம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. இதனையடுத்து ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைடையே முன் ஜாமின் கோரி ப.சிதம்பரம் அளித்த மனுவையும் நீதிமன்றம் பலமுறை நிராகரித்தது. சிபிஐ காவல் முடிந்த நிலையில், சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கப்பட்டால், சாட்சிகளை கலைக்கவும்,ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
பொருளாதார குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், எனவே, ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதன்பின்னர், சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், சிதம்பரத்திடம் விசாரணை தொடர்வதாகவும், சாட்சிகளை கலைக்கவில்லை என்றும் எனவே, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப கூடாது எனவும் வாதிட்டார். நீதிமன்ற காவலுக்காக திகார் சிறையில் மட்டும் அடைக்க வேண்டாம் என தாழ்மையுடன் கோரிக்கை வைப்பதாகவும் குறிப்பிட்டார்.
அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்லத் தயார் என்றும் சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை கோரிக்கையை நிராகரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார், 19ம் தேதி வரை சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதுடன், திகார் சிறையில் அடைக்கவும் ஆணை பிறப்பித்தார். சிறையில் உரிய மருந்துகளை வழங்கவும், படுக்கை, மேற்கத்திய கழிப்பறை வசதி மற்றும் சிறப்பு பாதுகாப்பு வழங்கவும் சிதம்பரம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட கோரிக்கையையும் நீதிமன்றம் மறுத்துள்ளது.
இதனிடையே அமலாக்கத்துறையிடம் சரண் அடைய தயாராக உள்ளதாக சிதம்பரம் தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனு குறித்து 12க்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு நீதிமன்ற உத்தரவை அடுத்து திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்படுகிறார்.