ஐஎன்எக்ஸ் மீடியா அந்நிய முதலீடு பெறுவதற்கு, முறைகேடாக அனுமதி அளிக்க, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு வெகுமதியாக வழங்கப்பட்ட பங்குகளின் மதிப்பு, ஆறரை கோடியில் இருந்து 65 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது ஐஎன்எக்ஸ் மீடியா அந்நிய முதலீடு பெறுவதற்கு முறைகேடாக அனுமதி அளித்த வழக்கில், ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோர், ஏப்ரல் 7 ஆம் தேதி நேரில் ஆஜராக டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கில், சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஆடிட்டர் பாஸ்கர ராமன், ஐஎன்எக்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பிரதிம் முகர்ஜியா மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஐஎன்எக்ஸ் நியூஸ் உள்ளிட்ட ஆறு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போதுமான முகாந்திரம் இருப்பதாக சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கின் குற்றப்பத்திரிகையில், அந்நிய முதலீடுக்கு முறைகேடாக அனுமதி அளிக்க ப.சிதம்பரம் வெகுமதியாக பெற்ற பங்குகளின் மதிப்பு ஆறரை கோடியில் இருந்து 65 கோடியே 90 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.