தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகளவில் அதிகரித்துள்ளதாக, இந்திய மருத்துவ சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத் தலைவர், சி.என்.ராஜா, ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஈரோட்டில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனைகளுக்கு கடந்த 10 நாட்களாக திரவ ஆக்சிஜன் அனுப்புவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், ஏராளமான கொரோனா நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகள்தான் அதிகளவில் மருத்துவமனைகளை நாடி வரும் நிலையுள்ளதால், ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்க வேண்டியது அவசியமென்றும் அவர் வலியுறுத்தினார்.
தனியார் மருத்துவர்களுடன் இணைந்து நோய்த்தொற்றை ஒழிப்பதற்காக, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும், இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத் தலைவர், சி.என்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்