தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆக்சிஜன் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பல மணி நேரமாக ஆம்புலன்சிலேயே காத்துக் கிடக்கின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறைந்த அளவு ஆக்சிஜன் படுக்கைகளே உள்ளன.
இதையடுத்து புதிதாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், ஆக்சிஜன் படுக்கை இல்லாததால் ஆம்புலன்சிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு காத்திருப்பவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் எந்தவிதமான மாற்று ஏற்பாடுகளையும் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் வீல்சேரில் உட்கார்ந்தபடியும், ஆம்புலன்சில் உள்ள படுக்கைகளில் படுத்தவாறும் நோயாளிகள் செயற்கை ஆக்சிஜனை சுவாசித்து வருகின்றனர்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தமுள்ள 677 படுக்கைகளையும், ஆக்சிஜன் இணைப்பு கொண்ட படுக்கைகளாக தரம் உயர்த்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவில் படுக்கைகள் நிரம்பியதால், வளாகத்தில் உட்கார வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அரசு மருத்துவனையில் உள்ள 250 படுக்கைகளும் முழுமையாக நிரம்பியுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் அமர வைத்து, தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் மருத்துவர்கள் சென்னைக்கு கொண்டு செல்லுமாறு கூறுவதால், நோயாளிகளின் உறவினர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர்.